கடும் விமர்சனம் எதிரொலி: சீமானுக்கு எதிராக விஜய் கட்சி தொண்டர்கள் பரபரப்பு சுவரொட்டி!
நடிகர் விஜய் மீது கடுமையான விமர்சனம் செய்த சீமானுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் பரபரப்பு சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதில் "எல்லா தேர்தலிலும் அடிவாங்குபவருக்கு தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் கடந்த மாதம் அக்டோபர் மாதம் ௨௭–ஆம் தேதி நடைபெற்றது. அதில் கட்சித் தலைவரும், நடிகருமான விஜய் சிறப்புரையாற்றினார். அப்போது திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று கூறி இருந்தார். அவரது இந்த பேச்சுக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கொந்தளித்தார். கடுமையாக விமர்சனமும் செய்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, "தம்பி, நான் குட்டிக் கதை சொல்ல வந்தவனில்லை. வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல்தான் பெரியார், அம்பேத்கர் எல்லோரையும் படிக்க வேண்டும். ஆனால் நாங்கள் அவர்களை படித்து பி.எச்டி. வாங்கியுள்ளோம். உங்களிடம் இருப்பது கொள்கை இல்லை. கூமுட்டை... அழுகின கூமுட்டை... ஒன்று ரோட்டில இந்த பக்கம் நில்லு, இல்ல அந்தப்பக்கம் நில்லு. நடுவுல நின்னா லாரியில் அடிபட்டு செத்துப்போவ. எப்படி தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றாக முடியும்" என கூறி இருந்தார்.
இதற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிர்வாகி சம்பத்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் அரசியல் எதிரியை முடிவு செய்து விட்டோம். சீமான் உள்ளிட்டோருக்கு பதில் சொன்னால், பயணத்தின் வேகம் தடைபடும் எனக் கூறி இருந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், எதிர்க்கட்சியினரின் தரக்குறைவான விமர்சனங்களுக்கு இணையதளங்களில் கண்ணியமாக பதில் அளிக்க வேண்டும் என்றும் பேசினார்.
இந்நிலையில் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானைக் கண்டித்து மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் தொண்டர்கள் பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர்.
அதில், அரசியலின் செல்லாக்காசு ச்சீ சீமானே... வன்மையாக கண்டிக்கிறோம். எல்லா தேர்தலிலும் அடி வாங்கும் உனக்கு, தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு. உடனடியாக மன்னிப்புக் கேள்... இது எச்சரிக்கை அல்ல கட்டளை... மதுரை வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments
Post a Comment